Sunday, February 13, 2011

இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டத்தில் குதிக்கும் விஜய்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவதை கண்டித்து, இம்மாதம் 22ம் தேதி நாகையில் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக "காவலன்" படத்தை ரிலீஸ் செய்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் விஜய். அடுத்தபடியாக "வேலாயுதம்", "நண்பன்" படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமது அரசியல் ரீதியான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு 50கிலோ இலவச அரிசி மூட்டைகளை வழங்கினார் விஜய். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார் விஜய்.

சமீபத்தில் நாகை மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு நிதியுதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பா.ஜா. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி ரூ2.லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

அரசியல் தலைவர்களை தொடர்ந்து விஜய்யும், வருகிற பிப்ரவரி 22ம்‌ தேதி மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். அத்துடன் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்யவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானபேர் கலந்து கொள்கின்றனர். இதனை திருச்சி, நாகை மாவட்ட விஜய் ரசிகர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...